Posted on

Crazy Mohan’s – கண்டேன் அனுமனை

Crazy Mohan: கண்டேன் அனுமனை13423981_10206775303483497_3532959658083472761_n
—————————————
அனுமந்த ராயா அசகாய சூரா
தினமுந்தன் பாதம் தொழுவேன் -எனையிந்த
பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிட
தோழா கொடுத்திடு தோள்….(1)

அனுதினம் ராமா யணமதை ஓதும்
அனுமனே அஞ்சனை அன்பே -கணுவிலா
பக்திக் கரும்பே பயமிலா வாழ்க்கை
சித்திக்கச் செய்வாய் சரண்….(2)

வினய வடிவம் விழிகளில் பாஷ்பம்
கணைவிடு ராமன் கதையே -துணையாய்
அணையா விளக்காய் அமர்ந்த அனுமான்
இணையே(தும்) இல்லா இறை….(3)

பாரிஜாத வாசம் பணிராமன் காரியம்
வேறுஜாதி வானரம் மாருதி -மாறுவேடம்
பூண்டுவந்த ருத்திரன் பூமிவாயு புத்திரன்
வேண்டுவோர்தம் வீட்டில் வரவு….(4)

அண்ணல் நினைப்பினால் கண்ணில் பனித்திரை
விண்ணில் பறந்தோன் வெகுளியாய் -திண்ணையில்
ஸ்ரீ£ராம் ஜெயராம் ஜெயஜெய ராமென்று
தீராத் தவத்தில் திளைப்பு….(5)

வீரன் வினயன் வெகுசமர்த்தன் ஈசனவ
தாரன் ரகுநாதன் இஷ்டவேலைக் -காரன்
கடல்கடந்து அய்யன் கணையாழி தந்த
உடல்கடந்தோன் உள்ளம் உணர்….(6)….இந்திர ஜித்தனின் தந்திரக் கட்டகல
எந்திர வேகத்தில் ஏகிய -சுந்தரன்
வெற்ப்பெடுத்து வந்தவனின் வீரக் கழல்களை
நிர்பயம் கொள்ள நெருங்கு….(7)

”ராம்”புகல் மந்திரம் ஜாம்பவான் உந்துதல்
வான்புக ஓங்கிய வானரம் -தேன்புகும்
கூந்தலாள் சூடாமணி ஏந்தி எஜமான்முன்
சேர்ந்தனன் சேவடி சேர்….(8)

புரவிகள் ஏழினைப் பூட்டிய தேரில்
இரவியோ(டு) ஏகி உயர்ந்த -அறிவினைப்
பெற்ற கவிக்குல பேரொளியை காகுத்தர்(கு)
உற்ற அனுமன்தாள் பற்று….(9)

வாயு குமாரன் வலிமிகு தோளினன்
ஆய கலைகள் அறிந்தவன் -தூயநல்
நெஞ்சினன் தொல்லை அழிப்பவன் தாயவள்
அஞ்சனை மைந்தன் அரண்….(10)

வாயு குமாரன் வலிமிகு தோளினன்
ஆய கலைகள் அறிந்தவன் -மாயவன்
அஞ்சன வண்ணனின் ஆருயிர்த் தோழனை
நெஞ்சினில் வைக்க நிறைவு….(11)

சினத்தீ இராவணன் சீர்மல்கு தீவில்
கணத்தில்தீ வைத்து அசோக (OR) கொளுத்தி-வனத்தில்
கணையாழி தந்தன்னை கண்ணீர் துடைத்தோய்
வினையாழி தாண்டிட வை….(12)….வால் நீளும்)….!எஜமானன் ராமனுக்(கு) என்றும் பணிந்த
நிஜமான பக்தன் அனுமான் -புஜத்தில்
வடைமாலை சார்த்தி வணங்கி உறங்க
விடிகாலை காண்போம் வியப்பு….(13)

எங்கு இராமன் காதை நிகழ்ந்தாலும்
அங்கு விழியிலா னந்தபாஷ்பம் -பொங்கிவர
கைத்தாளம் இட்டு குதூகலிக்கும் மாருதியின்
மெய்த்தலம் சிந்திக்க மாண்பு….(14)

திடமான பக்தி தெளிவான ஞானம்
கடமை தவறாத கர்மம் -அடைய
அனுமானை அஞ்சனை மைந்தனை என்றும்
மனமாறப் போற்றி மகிழ்….(15)

தன்பலம் காட்டா தவசீலன் தர்மமென்றால்
தன்பலன் பாரா(து) உழைப்பவன் -தன்புலன்
ஐந்தினை ஆளும் அனுமனை, வாயு
மைந்தனைப் பாடல் மகிழ்வு….(16)

சுந்தர காண்ட சுருதி உரைக்கும்
மந்திர வாசக மாருதியே -எந்திரமாய்
உண்டு உறங்கி உலகக் கிணற்றில்
மண்டூகம் ஆச்சே மதி….(17)

பொறிகளின் சூழ்ச்சியால் பெண்களின் காமக்
குறிகளில் வீழ்ந்திட வாழ்க்கை -நெறிதவறி
கஜ்ராஹோ கெட்டகனா காணாது கண்விழிக்க
பஜ்ரங் பலீயுன் பணி….(18).திருத்துழாய் காட்டில் கருத்துடன் ராமன்
திருப்பெயர் ஓதும் தவமே -மருத்துவக்
குன்றேந்தி வந்தோய் குணமயக்கம் போக்கிட
இன்றேந்தி வாருமய்யா இங்கு….(19)

பொன்னும் கிடைக்கும் புதனும் அகப்படும்
எண்ணும் எழுத்தும் இருவிழியாய் -மின்னும்
கவிக்குல முக்யன் கமல பதங்கள்
தவிக்கையில் தோன்றும் துணைக்கு….(20)

மூவாசை கொள்ளா முதல்வோன் ரகுராம
சேவைசெய் ஆசை சிவரூபன் -பூவாச
அன்னையைக் கண்டு அசோக வனத்திடை
இன்னலைத் தீர்த்தோன் இவன்….(21)

ஆஞ்ச நேயன் அசாத்திய சாதகன்
காஞ்சன அன்னையைக் கண்டன்று -வாஞ்சையாய்
வில்லாளி நாயகன் வாக்களிப்பை விண்டுரைத்த
சொல்லாளி சுந்தரன்பேர் சொல்லு….(22)

புலன்களாம் ஐவரோடு ஆறா காது
விலங்கினைப் பூட்டிய வாயு -குலன்மகன்
தாசரதி தோழன் தசகண்ட ராவணன்
வாசலெதிர் வந்தோன்வால் வாள்…. (23)

இராமன் இளையோன் இருதோள் இருக்க
இராவணன் போரில் இறக்க -அரோஹரன்
அம்சனே அஞ்சனை ஆண்மகனே வானர
வம்சனே வாழியநின் வாகு….(24)….குரங்கெண்ணம் காக்க மருந்துண்ண வைக்க
விரைந்தோடிக் கண்டாய் வரையை -திருந்தேன்
மலைநிகர்த்த நீயிருக்க மற்றெதையோ நாடினேன்
தலையிருக்க வாலாடும் தீங்கு….(25)

அறிவில் கதிரொளி ஆற்றலில் ஈசன்
திருவில் ஜனகமகள் தாசன் -உறவில்
குகனோடு ஆறானான் காகுத்தன் நட்பில்
நிகரில்லா மாருதியை நண்ணு….(26)

அறிவிலோ ஆசானாம் ஆற்றலில் ஈசன்
திருவிலோ ஜானகிக்கு தாசன் -உறவில்
குகனோடு ஆறாம் ரகுநாதன் தேர்வு
நிகரில்லா மாருதியை நண்ணு….(27)

வானரம் ஆயிரம் வாயைப் பிளந்திட
வானுற ஓங்கிநீள் வாரிதி -ஜாணுற
தாவி இலங்கைக்கு மேவிய மாருதியை
சேவிக்க சித்திக்கும் சத்து….(28)

உரம்கொடுக்கும் ஓங்க, கரம்கொடுக்கும் தாங்க
அரன்படைத்த அம்சன் அனுமான் -வரம்கொடுக்கும்
காலில் சிரம்கிடக்க, ஏழு மரம்தடுத்தும்
வாலி திறன்முடித்தோன் வாழ்த்து….(29)

பகுத்தறி வாளன் பரமராம பக்தன்
அகத்துறை ஆன்மன் அனுமான் -மகத்துவம்
பாடு ,மலர்ப்பதம் நாடு இகத்துடன்
வீடும் இணைந்திடும் வாழ்வு….(30)..தத்துவமாய் சைவன், தரணியில் ராமனின்
வித்தாய் விளைந்ததால் வைணவன், -மத்வ
மதமூலன் வாயு மகனனுமான் ராசி
பதமூலம் ஆசி பலன்….(31)

இராமவென்று கூறல் இராமவுரு காணல்
இராமகதை கேட்டல், இருப்பு -இராமன்கால்
என்றிருக்க மாருதிபோல், என்றும் குணசீலக்
குன்றுச்சியில் வைக்கும் குரங்கு….(32)

சீதை துயர்தீர்க்க வாத மகனாக
பூதலம் வந்தவுமை பாகனை -ஆதவன்
கூடவே சென்றன்று பாடம் பயின்றோனை
நாடவே நாடுமுனை நாடு….(33)

சேராது துஷ்ட சகவாசம், சேர்ந்தாலும்
மாறாது மனம்வாயு மைந்தனின் -பேரோத
தீராத வல்வினைகள் தூராதி தூரத்தில்
ஓரோரம் ஓடும் ஒளிந்து….(34)

வாலால் சகோதரன் வாயுமகன் பீமனின்
தோளா ணவகர்வம் தீர்த்தோனே -காளான்
எனவகந்தை என்னுள் எழுந்திடும் போது
மனமுவந்து ஆளென் மனது….(35)

பாரத யுத்தத்தில் பார்த்தனின் சாரதி
தேரதன் உச்சி திகழ்ந்தோனே -நூறதை
பாண்டவர் வெல்ல பலமாக வீசினாய்
காண்டீப வேள்வியில் காற்று….(36)..
கிரேசி மோகன்